பெண் தர மறுத்த மீனவர் படுகொலை


பெண் தர மறுத்த மீனவர் படுகொலை
x
தினத்தந்தி 24 April 2021 1:54 AM IST (Updated: 24 April 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பெண் தர மறுத்த மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மீனவர் மகளின் காதலன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் தாழங்குடா சுனாமிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). மீனவரான இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். மனைவிகள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தற்போது 2-வது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியன், தேவனாம்பட்டினத்தில் வசிக்கும் தனது முதல் மனைவியின் மகள் வீட்டுக்கு சென்று நிச்சயதார்த்த செலவுக்கு ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு தாழங்குடா புறப்பட்டார்.

ரத்த காயங்கள்

ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர், வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விடிய, விடிய அவரை பல்வேறு இடங்களில் தேடினர். 
இந்த நிலையில் நேற்று காலை தாழங்குடா அருகில் கண்டக்காடு- குண்டுஉப்பலவாடி சாலையோரம் சுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுப்பிரமணியன் உடலை பார்வையிட்டனர்.  அப்போது அவரது 2 கால்களின் முட்டியிலும், பின் தலை மற்றும் மூக்கில் ரத்தக் காயங்கள் இருந்தன. மேலும் அவர் தனது மகளிடம் வாங்கிக்கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.

2 பேரிடம் விசாரணை

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக சுத்துக்குளத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவர், சுப்பிரமணியன் மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது அவர் வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தம் வருகிற 26-ந்தேதி நடக்க இருந்ததும் தெரிந்தது.

கொலை

இதனால் அந்த வாலிபர், சுப்பிரமணியனிடம் அவரது மகளை தனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததும், அவரை காரில் ஏற்றி, அவரும் அவரது நண்பரும் சேர்ந்து துணியை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story