சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவுகள் கலப்பு விவசாயிகள் கவலை


சென்னிமலை அருகே  ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவுகள் கலப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 24 April 2021 2:19 AM IST (Updated: 24 April 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரத்துப்பாளையம் அணை
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. சுமார் 40 அடி உயரமுள்ள இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் அணை நீர் முற்றிலும் சாயக்கழிவுகளாக மாறியது. மேலும் அணையை சுற்றி உள்ள கிராமங்கள் மட்டுமின்றி அணையின் தண்ணீர் சென்ற திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறமும் உள்ள நீர்நிலைகளும் மாசுபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ எனப்படும் முழுமையாக சாயக்கழிவு இல்லாமல் வரும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 15 ஆண்டுகளாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஐகோர்ட்டு உத்தரவு
மேலும் திருப்பூர் பகுதியில் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் சாய தொழிற்சாலைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை சீல் வைக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
அதன்பேரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பகுதியில் முறைகேடாக செயல்பட்ட 100-க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சீல் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் திருப்பூர் பகுதியில் செயல்படும் சில சாய தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெளியேற்றி வந்தது விவசாயிகளுக்கு வேதனை அளித்தது.
சுத்தமான மழை நீர்
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழகம் முழுவதும் சில மாதங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது. அப்போது திருப்பூர் பகுதியில் செயல்பட்ட அனைத்து சாய தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு சமயத்தில் மழை பெய்த போது ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவு இல்லாமல் சுத்தமான மழை நீராக வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு திருப்பூர் பகுதியில் சாய தொழிற்சாலைகள் படிப்படியாக செயல்பட தொடங்கியது. இதனால் மீண்டும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
சாயக்கழிவு அதிகமாக...
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் மழை நீரை பயன்படுத்தி திருப்பூர் பகுதியில் செயல்படும் சில சாய தொழிற்சாலைகளிலிருந்து சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் வெளியேற்றியதால் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவு அதிகமாக கலந்து வருகிறது.
இதுகுறித்து சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கூறுகையில், ‘நீர்ப்பிடிப்பு பகுதியான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்து வறட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இந்த மழை நீரோடு திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருவதால் இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மழை காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து சாயக்கழிவுகளை முறைகேடாக வெளியேற்றும் சாய தொழிற்சாலைகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் தற்போது ஓரளவு நல்ல நிலையில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் மீண்டும் சாயக்கழிவுகளாக மாறிவிடும்,’ என்றனர்.

Next Story