சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட கோவில் பூசாரி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட கோவில் பூசாரி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட கோவில் பூசாரியின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் சிதம்பரம் என்ற துரை (வயது 41). இவர் அங்குள்ள சுடலை மாடசுவாமி கோவில் பூசாரியாக இருந்து வந்தார். கோவில் வளாகத்தில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 18-ந்தேதி இவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்துக்கு சிதம்பரத்தின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். குற்றவாளிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சிதம்பரத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அழகுமுத்துகோன் சிலை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென்று அழகுமுத்துகோன் சிலை பீடத்தில் ஏறி நின்றார். அவர் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றினார். மேலும் கையில் வைத்திருந்த சிறிய அரிவாளை கொண்டு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

பின்னர் போராட்டக்குழு நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் கலெக்டர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது சீவலப்பேரி கோவில் பகுதியில் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதாகவும், கோவில் நிர்வாகத்தில் மற்றவர்களின் இடையூறு இல்லாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் 1 ஏட்டு, 4 போலீசாரை கொண்டு சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் அருகில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று கலெக்டரால் அறிவிக்கப்பட்டது.

கலெக்டரின் இந்த நடவடிக்கையை அடுத்து சிதம்பரத்தின் உறவினர்கள் தங்களது தொடர் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிதம்பரத்தின் உடல் பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் 6 நாட்கள் நடைபெற்ற பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேரை சீவலப்பேரி போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சீவலப்பேரியை சேர்ந்த பூல் மகன் மாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதவிர சீவலப்பேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் (48) என்பவர் நேற்று நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தார். இவர்களுடன் சேர்த்து இந்த கொலை வழக்கில் மொத்தம் 12 பேர் கைதாகி உள்ளனர்.

Next Story