போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க ஆடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க ஆடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 April 2021 2:59 AM IST (Updated: 24 April 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க ஆடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்:

ஆடுகளுடன் வந்தனர்
இந்து முன்னணியின் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் ஆடு வளர்ப்போர் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க ஆடுகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆடு வளர்ப்போர் தற்போது, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள வயல்களில் பட்டி போட்டு ஆடுகள் மேய்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நாரணமங்கலம், கொளக்காநத்தம், குடிக்காடு, குரும்பபாளையம், கொட்டரை, ஆதனூர், தெற்கு மாதவி உள்ளிட்ட கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை மர்மநபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து திருடிச்சென்றுள்ளனர்.
தனிப்படை அமைக்க வேண்டும்
இது குறித்து ஆடு திருடியவர்களின் பெயர்கள், அவர்களின் ஊர், புகைப்படங்களுடன் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்கள் கோரிக்கை தொடர்பாக மனுவினை அலுவலகத்தில் இருந்த தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசனை சந்தித்து கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story