விற்பனை கூடத்திற்கு அதிகாலையில் வேளாண் பொருட்களுடன் வந்த விவசாயிகள்
இரவு நேர ஊரடங்கால் விற்பனை கூடத்திற்கு அதிகாலையில் வேளாண் பொருட்களுடன் விவசாயிகள் வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருச்சி- சிதம்பரம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வேளாண் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த எள், கடலை, சோளம் உள்ளிட்ட பொருட்களை இரவு நேரங்களில் வாடகை வாகனங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாகனங்களில் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி முதலே அந்த விற்பனை கூடத்திற்கு டிராக்டர், சரக்கு வேன் போன்ற வாகனங்களில் விவசாய பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான விவசாயிகள் வந்தனர். விற்பனைக்கூட நுழைவு வாயில் முன்பு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் வாகனங்களில் வேளாண் பொருட்களை ஏற்றி வந்த விவசாயிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். பின்னர் காலை 7 மணி முதல் 8 மணி வரை விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு உள்ளே செல்ல சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வேளாண் பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகளுக்காக விவசாயிகள் காத்திருந்தனர். வேளாண் பொருட்களை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோரிக்கை
இரவு நேர ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வந்த விவசாயிகள் கூறியதாவது;-
ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நாங்கள் கொண்டு வரும் வேளாண் பொருட்களை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக பொருட்களை விற்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் வியாபாரிகள் கொள்முதல் செய்த எள், கடலை, சோளம் உள்ளிட்டவற்றை லாரிகளில் ஏற்ற இரவு 8 மணி வரை ஆகிறது. பின்னர் இரவு 9, 10 மணிக்குள் வியாபாரிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாததால், அவர்கள் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை சென்று சரக்கை இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு விளைவித்த பொருட்களை விற்பனை செய்வதிலும், வியாபாரிகள் அவற்றை கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்காக இரவு நேர ஊரடங்கில் விதிவிலக்கு அளித்து, வேளாண் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இரவில் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் கொள்முதல் செய்த எள், கடலை, சோளம் உள்ளிட்டவைகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story