பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 9 பேர் சிக்கினர்


பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 9 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 24 April 2021 3:35 AM IST (Updated: 24 April 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

வாவிபாளையம் அருகே பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 9 பேர் சிக்கினர்.

அனுப்பர்பாளையம்
வாவிபாளையம் அருகே பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 9 பேர் சிக்கினர்.
பனை மரங்கள்
திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் கருப்பசாமி, ராஜேந்திரன், செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு சோளத்தட்டு பயிரிடப்பட்டுள்ளதுடன், ஏராளமான பனை மரங்களும் உள்ளன. அந்த நிலத்தில் இருந்த பனை மரங்களை மர்ம நபர்கள் சிலர்  அனுமதியின்றி வெட்டுவதாக நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உரிமையாளர்கள் 3 பேரும் உறவினர்களுடன் உடனடியாக அங்கு சென்றனர். 
அப்போது 9 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பனைமரங்களை வெட்டி கொண்டிருந்தது. இவர்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் மரத்தை வெட்டுவதை நிறுத்தினர். அந்த கும்பலிடம் உரிமையாளர்கள் 3 பேரும் யாரிடம் கேட்டு மரத்தை  வெட்டுகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அனுமதியின்றி பனைமரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் அந்த கும்பல் 6 மரங்களை வெட்டி சாய்த்ததும் தெரிந்தது. 
9 பேர் சிக்கினர்
இதையடுத்து மரம் வெட்ட வந்தவர்கள் மற்றும் மரத்தை ஏற்றிச் செல்வதற்காக வந்த சரக்கு வேனை சிறைப்பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மரங்களை வெட்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் சேவூர், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், புரோக்கர் ராஜேந்திரன், வேன் டிரைவர் உள்பட 9 பேர் என்பதும் தெரியவந்தது. மேலும் செங்கல் சூளைக்காக பனை மரங்களை வெட்டி சென்று விற்பனை செய்வதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story