மரக்கோட்டை கிராமத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த காருவள்ளி ஊராட்சி மரக்கோட்டை பகுதியில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி 4 பேர் பரிசோதனைக்காக காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொேரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மரக்கோட்டை கிராமத்தில் பரிசோதனை செய்ததில் மேலும் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாதுபக்தசிங் தலைமையில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மரக்கோட்டை கிராமத்தில் மருத்துவ முகாம் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும் கிராமத்துக்குள் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், ஊருக்குள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மேலும் 10 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story