முககவசம் அணிந்தவர்களிடம் போலீசார் கட்டாய அபராதம் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
முககவசம் அணிந்தவர்களிடம் போலீசார் கட்டாயமாக அபராதம் வசூலித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அரியாங்குப்பம்,
புதுவையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதை தடுக்க அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. முககவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் மற்றும் தவளக்குப்பம் போலீசார் நின்றுகொண்டு மோட்டார் சைக்கிள்கள், கார், லாரி, மினிவேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். சில நேரங்களில் முககவசம் அணிந்து வருபவரிகளுக்கும் கட்டாயமாக அபராதம் விதிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தவளக்குப்பம் போலீஸ் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், முககவசம் அணிந்து வந்த மினிவேன் டிரைவர்களிடம் அபராதம் விதித்தனர். அதில் ஒருவர், நான் தான் முககவசம் அணிந்துள்ளேனே, எதற்கு அபராதம் செலுத்தவேண்டும் என்று போலீசாரிடம் கேட்டார். ஆனால் அவரிடம் போலீசார் கட்டாயமாக ரூ.100 வாங்கிக்கொண்டனர். அதற்கான ரசீதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த மற்றொரு டிரைவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. முககவசம் அணிந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதிப்பது பொதுமக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story