தேனியில் சாலை சீரமைப்பு பணியின் போது அறிவிப்பு பதாகைகள் வைப்பதற்கு பதில் மரக்கிளைகளை வெட்டி வீசிய அவலம்
தேனியில் சாலை சீரமைப்பு பணியின் போது அறிவிப்பு பதாகைகள் வைப்பதற்கு பதில் மரக்கிளைகளை வெட்டி வீசிய அவலம் நடந்தது.
தேனி:
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து முதன்மை கல்வி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார்சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. சாலை பணி நடப்பது குறித்த அறிவிப்பு பதாகைகள் எதுவும் வைக்காமல் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் நேற்று சாலை சீரமைப்பு பணியின் போது அறிவிப்பு பதாகைகளுக்கு பதிலாக அந்த சாலையோரம் நின்ற புங்கன், வேம்பு உள்ளிட்ட மரங்களின் கிளைகளை வெட்டி சாலையில் ஆங்காங்கே வீசி இருந்தனர். சாலை அமைக்கும் பணி நடப்பது குறித்து அறிவிப்பு செய்யும் வகையிலும், புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வாகனங்கள் சென்று விடாமல் தடுக்கவும் இவ்வாறு மரக்கிளைகளை வெட்டி போட்டு இருந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அறிவிப்பு பதாகைகள் வைப்பதை விட்டுவிட்டு, சிறிய மரங்களின் கிளைகளை வெட்டி போட்டு இருந்ததை மக்கள் கண்டித்தனர். இதையடுத்து பணியாளர்கள் மரக்கிளைகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். தேனியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மரங்களில் நிழலை தேடி மக்கள் ஓடும் நிலைமை உள்ளது. இந்தநிலையில் சாலை அமைக்கும் பணிக்கான அறிவிப்பு பதாகைகள் வைப்பதற்கு பதில் மரக்கிளைகளை வெட்டி பயன்படுத்திய சம்பவம் சமூக ஆர்வலர்களை வேதனை அடைய செய்தது.
Related Tags :
Next Story