அரசு போக்குவரத்து கழகத்துக்கு 40 சதவீதம் வருவாய் இழப்பு
நீலகிரியில் இரவு நேர ஊரடங்கால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 40 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் ஊட்டியில் இருந்து சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, துறையூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் அங்குள்ள பணிமனையில் தங்கி இருந்து
மறுநாள் பஸ்களை இயக்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் 6 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து கிராமப்புறங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு 320 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு இயக்க அனுமதி கிடைக்காததால் 10 பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மற்ற இடங்களுக்கு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது. இரவு நேர ஊரடங்கு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கால் நீலகிரியில் போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிய கட்டுப்பாடுகளால் நீலகிரியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இரவில் திரும்பி வர முடியாத நிலை உள்ளது. இதனால் காலையில் இருந்து மட்டும் வெளியிங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
மாலையில் இயக்கப்படும் 30 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மற்ற நாட்களில் 80 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வருவாய் கணிசமாக குறைந்து உள்ளது. நீலகிரியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 40 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
Related Tags :
Next Story