சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி வியாபாரிகள், டிரைவர்கள் போராட்டம்
ஊட்டியில் சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி வியாபாரிகள், டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் 50 சதவீத சுற்றுலா பயணிகளையாவது அனுமதிக்கக்கோரி கடந்த 19-ந் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட சுற்றுலா நலம் சார்ந்த கூட்டமைப்பு சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அருகே கடைகளை வைத்து உள்ள வியாபாரிகள், சுற்றுலா வாகன டிரைவர்கள், தாவரவியல் பூங்கா அருகே வியாபாரம் செய்து வந்த திபெத்தியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் சுற்றுலா தலங்களை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு வண்ணத்தில் முககவசம் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு 8 மாதம் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. தற்போது மீண்டும் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்த நாங்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறோம்.
எங்களது கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்து 50 சதவீத சுற்றுலா பயணிகளையாவது அனுமதித்து, அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.போராட்டம் 2 மணி நேரம் நடந்தது.
போலீஸ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையொட்டி போலீசார் தடுப்புகள் வைத்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பெண் வியாபாரிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story