பள்ளிவாசல்களில் தொழுகை, நோன்பு கஞ்சி ரத்து
முழு ஊரடங்கை தொடர்ந்து பள்ளிவாசல்களில் தொழுகை, நோன்பு கஞ்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனைக்குளம்,
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் அளவில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல்களில் தொழுகை மற்றும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. மேலும் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது எனவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் வாழுர், சித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டுவரும் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் ஆற்றங்கரை தஸ்தகீர், செயலாளர் அழகன்குளம் பக்ருல் அமீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இதற்கான அறிவிப்புகளை செய்துள்ளனர். முழுஊரடங்கை தொடர்ந்து வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். நேற்று இரவு 9 மணி வரை கோழி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். வெளிமாவட்டங்களில் வேலை செய்து சனி, ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரக்கூடியவர்கள் யாரும் வரவில்லை. வேலை செய்யும் இடத்திலேயே தங்கினர்.
Related Tags :
Next Story