பார்சல் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தல்


பார்சல் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தல்
x
தினத்தந்தி 24 April 2021 9:40 PM IST (Updated: 24 April 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

பார்சல் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தப்பட்டது. அந்த பார்சல் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

வேலூர்

பார்சல் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தப்பட்டது. அந்த பார்சல் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையில், 2-வது மண்டல உதவி கமிஷனர் பாலு, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள்   மண்டி வீதி, சுண்ணாம்புகார தெரு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தினார்களா? என ஆய்வு செய்தனர்.

மண்டிவீதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு பார்சல் சர்வீஸ் கடையின் முன்பு 5 பெட்டிகள் இருந்தது. இதைப்பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து அதை அதிகாரிகள் உடனடியாக பிரித்து பார்த்தனர். அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பார்சல் மூலம் கடத்தல்

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கடைக்காரர், பார்சலில் குறிப்பிட்ட முகவரிக்கு பார்சலை அனுப்பி வைக்கும் பணி மட்டுமே எங்களது பணி. அதில் என்ன பொருட்கள் உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்றார். 

தொடர் விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் அந்த கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் அந்த பார்சலை அனுப்பியது யார்? அதில் குறிப்பிட்டுள்ள முகவரி யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பார்சல் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் என்பதால் டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் இந்த நூதன முறையை கையாண்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story