மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
தினத்தந்தி 24 April 2021 10:14 PM IST (Updated: 24 April 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

ஊட்டி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. 

அத்தியாவசிய தேவையான பால் வினியோகம், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ துறை சார்ந்த பணிகள், விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், டீசல், பெட்ரோல் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி ஊட்டியில் நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களை வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்கியதை காண முடிந்தது.

மேலும் சாலையோரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்க அதிகளவில் வந்து சென்றனர்.

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிகளவில் வருகை தந்தனர். இதனால் ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து இருந்தது.
முழு ஊரடங்கில் ஆட்டோக்கள், அரசு பஸ்கள் இயங்காது.

 தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து சோதனை நடத்துகின்றனர்.

கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதியில் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 இதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Next Story