இன்று முழு ஊரடங்கு: விழுப்புரம் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


இன்று முழு ஊரடங்கு: விழுப்புரம் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 24 April 2021 10:18 PM IST (Updated: 24 April 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

இன்று முழு ஊரடங்கையொட்டி நேற்று விழுப்புரம் மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

விழுப்புரம், 


தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஒரு சங்கிலி தொடர் போன்றது, அதன் சங்கிலியை உடைத்தால் தான் பரவலை கட்டுக்குள் கொண்டு வர இயலும். 

அதனால் தான் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அரிவித்து இருந்தது. 

அந்த வகையில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.  இன்று அனைத்து கடைகளும் இயங்காது என்பதால் வீட்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்குவதற்காக நேற்று காலையில் இருந்தே விழுப்புரம் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒரே நேரத்தில் குவிந்தனர்

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக நேற்று விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கூட்டம், கூட்டமாக சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள், மார்க்கெட்டுகளில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை காற்றில் பறக்க விட்டதுபோன்று பொதுமக்களில் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தை மறந்து ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச்சென்றனர். இதேபோல் இறைச்சிகடைகள், மீன் மார்க்கெட்களிலும் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

டாஸ்மாக் கடைகள்


அதேபோல் முழு ஊரடங்கான இன்று டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்பதால் மதுபான வகைகளை வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு மதுப்பிரியர்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர். இதனால் நேற்று மாலையில் டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பலர் 2, 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச்சென்றனர்.


கொரோனா முழு ஊரடங்கு என்பது மக்கள் கூடுதை தடுக்கவே, இது போன்று முந்தைய தினங்களில் மக்கள் ஒன்று கூடினால், அதற்கு பலனே தராத நிலையை ஏற்படுத்திவிடும். எனவே இனி வரும் நாட்களில் மக்கள் இதை உணர்ந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்வதுடன், கூட்டம் கூடுவதை தவிர்த்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கொரோனாவின் சங்கிலி தொடரை உடைத்து, இந்த போரில் வென்று இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story