ஆழியாறில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு
வால்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆழியாறில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர்.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை மூடுவதற்கும் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள டாப்சிலிப், ஆழியாறு அணை மற்றும் பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடந்த 20-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தடை உத்தரவை மீறி சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் ஆழியாறில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
அங்கு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வால்பாறை செல்வதற்கு வந்த சுற்றுலா பயணிகளை சோதனைச் சாவடியில் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு செல்லும் நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.
மேலும் வால்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
வால்பாறையை குடியிருந்து மற்றும் வியாபாரம் செய்து வரும் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவிற்கு செல்வோர் இ-பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்.
வால்பாறையில் குடியிருக்கும் நபர்கள் ஆதார் அட்டை நகல் வைத்திருக்க வேண்டும். தொற்று பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story