மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.12¼ லட்சம் திருட்டு
கோவை சிங்காநல்லூரில் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.12¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக இருப்பவர் ரமேஷ்பாபு (வயது45).
கொரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு ஷோரூமை, பூட்டி விட்டு சென்றார். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
இரவு நேர ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திய மர்ம ஆசாமிகள், காவலாளி கழிவறைக்கு சென்ற நேரத்தில் ஷோரூமின் பின் பக்கம் சென்றனர். அங்கு இருந்த ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் ஷோரூமின் கல்லாவில் இருந்த ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலையில் ஷோரூமை திறக்க வந்த மேலாளர் கல்லாவில் இருந்த பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவர் ஷோரூம் முழுவதும் சென்று பார்த்த போது மர்ம ஆசாமிகள் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்தது தெரிய வந்தது.பின்னர் இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் 4 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷோரூமில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது முககவசம் அணிந்து மர்ம ஆசாமிகள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை வைத்தும் மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் ரூ.12¼ லட்சத்தை திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story