வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கல்; 2 பேர் கைது
வாடகை வீடு எடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்,
செஞ்சி அருகே அப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அப்பம்பட்டு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுப்பையா நகரில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பாக்கெட், பாக்கெட்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்தவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர், செஞ்சி அருகே உள்ள சித்தாம்பூண்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 42) என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து அப்பம்பட்டு சுப்பையா நகரில் வாடகை வீடு எடுத்து அங்கு அந்த பொருட்களை பதுக்கி வைத்து செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுந்தரமூர்த்தியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 870 மதிப்புள்ள 26 ஆயிரத்து 475 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி
இதேபோல் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், ஞானசேகர் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் அருகே உள்ள பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்த டான் போஸ்கோ என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ. 86 ஆயிரத்து 400 ஆகும். இது தொடர்பாக, டான் போஸ்கோவை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story