கரூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிரம்பி வழிந்தது


கரூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிரம்பி வழிந்தது
x
தினத்தந்தி 24 April 2021 11:29 PM IST (Updated: 24 April 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிரம்பி வழிந்தது. ஆனால் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

கரூர்
முழு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த 10-ந்தேதி பஸ்களில் பயணிகள் நின்று செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அறிவித்தது. 
அதன்படி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரங்களில் அவசர தேவைகளை தவிர எந்த வாகனங்களும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து என்பது முற்றிலும் இரவில் முடக்கப்பட்டுள்ளதால் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
பஸ்நிலையம் நிரம்பியது
அந்தவகையில் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், மோகனூர், வாங்கல், சின்னதாராபுரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு உள்ளூர் பஸ்களும், திருச்சி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு ஊர்களுக்கு வெளியூர் பஸ்களும் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கால் இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால், பகலில் அதற்கு ஏற்றாற்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
 இதனால் பகல் நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களால் கரூர் பஸ் நிலையம் நிரம்பியுள்ளது. பயணிகளும் இரவு நேர ஊரடங்கை கருத்தில் கொண்டு பகலில் தங்களது பயண திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக கரூர் பஸ் நிலையத்தில் கடைசி பஸ்களின் விபரம் குறித்து பதாகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இ்ன்று முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமும் சற்று குறைவாக இருந்தது.

Next Story