உப்பிடமங்கலம் வாரச்சந்தை கூடியது
இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உப்பிடமங்கலத்தில் நேற்றே வாரச்சந்தை கூடியது. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் பலர் முககவசம் அணியாமல் இருந்தனர்.
வெள்ளியணை
புகழ்பெற்ற வாரச்சந்தை
தமிழக அளவில் புகழ் பெற்ற வாரச்சந்தைகளில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் வாரச்சந்தையும் ஒன்றாகும். இந்த சந்தை மாடுகள் விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். வார நாட்களில் சனிக்கிழமை காலையில் மாட்டு கன்று குட்டிகள் மற்றும் இறைச்சி மாடுகள் அதிக அளவில் விற்கப்படும்.ஞாயிற்றுக்கிழமை காலையில் கறவை மாடுகள் மற்றும் வளர்ப்பு மாடுகள் அதிக அளவில் விற்கப்படும். இங்கு விற்கப்படும் மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை வாங்க கரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகளும், விவசாயிகளும் வருகின்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், விதை தானியங்கள், விதை நாற்றுக்கள், விவசாய இடுபொருட்கள், ஜவுளிகள் என பல்வேறு வகையான பொருட்களை வியாபாரிகளும் விவசாயிகளும் இங்கு கொண்டுவந்து விற்கின்றனர். இவற்றை வாங்குவதற்கு உப்பிடமங்கலம் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் இந்த சந்தைக்கு வந்து செல்வர். சனி, ஞாயிறு என இரண்டு நாட்களிலும் இந்த சந்தையால் பல லட்ச ரூபாய் பணப்புழக்கம் உப்பிடமங்கலம் பகுதியில் இருக்கும். இப்படி புகழ் பெற்ற இந்த வாரச்சந்தை சென்ற ஆண்டு கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் சில மாதங்கள் மூடி கிடந்தது.
வாரச்சந்தை கூடியது
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட வாரச்சந்தை தற்போது தான் இயல்பு நிலைக்கு மாறி வியாபாரிகளும், விவசாயிகளும், பொதுமக்களும் வரத்தொடங்கி இருந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகமாகியதை தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை கூட வேண்டிய வாரச்சந்தை சனிக்கிழமையான நேற்று கூடியது.
முககவசம் அணியவில்லை
இதில் குறைந்த அளவிலான விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தைக்கு வருகின்ற பொது மக்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருந்தது. மேலும் வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் முககவசம் அணிந்து இருந்தனர். கொரோனா பரவல் தெரியாமல் சந்தைக்கு வந்த பல வியாபாரிகள், பொதுமக்கள் முககவசம் அணியாமல் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story