சமயநல்லூர் கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் சீரமைப்பு பணி


சமயநல்லூர் கன்னியாகுமரி  4 வழிச்சாலையில் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 25 April 2021 12:25 AM IST (Updated: 25 April 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

சமயநல்லூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் ரோடு சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது.

மதுரை,ஏப்
சமயநல்லூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் ரோடு சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது.
மோசமான சாலைகள்
மதுரை சமயநல்லூர்-கன்னியாகுமரி இடையே 4 வழிச்சாலையில் உள்ள ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனை சீரமைப்பதற்கு பதிலாக சுங்கக்கட்டணத்தை கடந்த 1-ந் தேதி முதல் உயர்த்தி வசூலித்து வருகின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரோட்டை பராமரிக்காமல் இருந்துவிட்டு, சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு ஐகோர்ட்டு ம்ற்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த பாதையில் உள்ள 4 வழிச்சாலையில் ரோடுகள் புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இதில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வருகிற 1-ந் தேதிக்குள் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கப்பலூர் 4 வழிச்சாலையில் ரோடு சீரமைக்கும் பணிக்கான ஆரம்பக் கட்ட பணிகள் நேற்று தொடங்கியது.
கேள்விக்குறி
இந்தப் பணிகளில் மோசமடைந்துள்ள ரோடுகளை நாள் ஒன்றுக்கு 1.5 கி.மீ. தூரத்துக்கு பெயர்த்தெடுக்கும் பணிகளும், புதிய ரோடு நாள் ஒன்றுக்கு 1.2 கி.மீ. தூரம் அமைக்கும் பணிகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் வருகிற அக்டோபர் மாதம் முடிவடையும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய ஆரம்பக் கட்ட பணியில் மாநில நெடுஞ்சாலைகளில் மேற்கொள்வது போல ரோட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் ஒட்டு போடும் பணி நடக்கிறது. ரோடுகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையே, ரோடு சீரமைப்பு பணியின் போது, தேவையான போக்குவரத்து விதிமுறை வழிகாட்டி பலகைகள், சாலை விதி கோடுகள், தடுப்புகள், இரவில் ஒளிரும் பெயிண்டு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பணிகளும் நடக்குமா என்பது தெரியவில்லை. 
மரக்கன்றுகள் பராமரிப்பு
அத்துடன், ரோட்டின் ஓரங்களில் உள்ள இடவசதியை பொறுத்து ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் சுமார் 583 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பு சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தளவுக்கு இதனை செயல்படுத்துவர் என்பது புரியாத புதிராக உள்ளது. பொதுவாக 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளன.
இதற்கேற்றாற் போல, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 6,165 கி.மீ. தூர 4 வழிச்சாலை சுங்கச்சாவடிகளின் மூலம் ரூ.84 ஆயிரம் கோடி வருமானம் பார்க்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story