திருச்சி ஜெயில்பேட்டை பகுதியில் ரூ.4 கோடி வாடகை நிலுவை; 44 இரும்பு கடைகளுக்கு ‘சீல்’


திருச்சி ஜெயில்பேட்டை பகுதியில் ரூ.4 கோடி வாடகை நிலுவை; 44 இரும்பு கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 25 April 2021 12:59 AM IST (Updated: 25 April 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜெயில்பேட்டை பகுதியில் ரூ.4 கோடி நிலுவைத்தொகை செலுத்தாத 44 இரும்பு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி, 
திருச்சி ஜெயில்பேட்டை பகுதியில் ரூ.4 கோடி நிலுவைத்தொகை செலுத்தாத 44 இரும்பு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ரூ.4 கோடி வாடகை நிலுவை
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட சப்-ஜெயில் ரோட்டில் உள்ள ஜெயில் பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு மாத வாடகை அடிப்படையில் இரும்பு கடைகள், சாக்குப் பை கடைகள், நெல்-அரிசி வியாபாரக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டுக்கு ஒரு முறை வாடகை உயர்த்தப்படும். 
இந்தநிலையில் அங்குள்ள 44 கடைகளின் உரிமையாளர்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முறையாக வாடகை செலுத்தவில்லை. இதனால், வாடகை மற்றும் அபராத வட்டி என ரூ.4 கோடிக்கு மேல் வாடகை நிலுவை உள்ளது கண்டறியப்பட்டது. 
44 கடைகளுக்கு ‘சீல்’
அதைத்தொடர்ந்து வட்டியுடன் முழுத்தொகையும் செலுத்த அறிவிப்பு செய்யப்பட்டும், அதன் உரிமையாளர்கள் வாடகை நிலுவை செலுத்த முன்வர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் நேற்று அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் லோகநாதன், நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம், உதவி வருவாய் அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஜெயில்பேட்டை சென்றனர். பின்னர் அங்குள்ள இரும்பு கடைகள், சாக்குப் பை கடைகள் மற்றும் நெல் வியாபாரக் கடைகள் என மொத்தம் 44 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அதற்கு கடைக்காரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியதாவது:-
அபராதம் இன்றி வாடகை
கடந்த 2004-ம் ஆண்டு வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிகாரிகள், வாடகை நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகளாகிய நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.
அப்போது கோர்ட்டு, அதிகாரிகள் பரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பித்தது. வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. இந்த வேளையில் வாடகை நிலுவைக்கு அதிகம் அபராத வட்டி விதித்து எங்களை கட்ட சொல்கிறார்கள். வட்டி அபராதம் நீக்கி வாடகையை மட்டும் செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
கொரோனா காலத்தில் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து வரும் வேளையில் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து கடைகளுக்கு ‘சீல்’ வைத்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story