நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூ.50க்கு விற்பனை
நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூ.50க்கு விற்பனை செய்யும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
மதுரை, ஏப்
நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூ.50-க்கு விற்பனை செய்யும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
முன்னேற்பாடு நடவடிக்கை
கொரோனா தடுப்பு பணியாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்பழகன் மருந்து பெட்டகத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு கொரோனாவின் 2-வது அலை தாக்கத்தின் வேகம் மிக அதிகமாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் அனைத்து அலுவலர்களின் கூட்டு முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மருந்து பெட்டகம்
தடுப்பூசிகள் போடுவது, அதிகப்படியான பரிசோதனை மேற்கொள்ளுதல், நோய் வாய்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனையில் சேர்த்தல், நோய் தொற்றினை மேலும் பரவாமல் தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. அந்த பெட்டகத்தில் ஆடதோட மணப்பாகு, தாளிசாதி மாத்திரைகள், கபசுர குடிநீர் சூரணம் ஆகிய மருந்துகள் உள்ளன. அதன் விலை வெறும் ரூ.50 மட்டும் தான். இந்த பெட்டகம் மாநகரில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த மருந்து பெட்டகம் ஒரு உயிர்க்காக்கும் மருந்து பெட்டகம் ஆகும்.
தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர் அவரவர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வாங்கி சென்று உள்ளனர். குறிப்பாக செஞ்சிலுவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் இப்பணியினை மிக சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
பரிசோதனை
முன்பு பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் தெரிவித்த காரணத்தினால் தடுப்பூசி இருப்பு இருந்தது. கொரோனா 2-ம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்த வந்த காரணத்தினால் இருப்பு குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது கடந்த 3 நாட்களாக தமிழக அரசு போதுமான அளவு தடுப்பூசி வழங்கி உள்ளது. தற்போது தட்டுப்பாடு ஏதும் இல்லை. முன்பு கொரோனா முகாமில் பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பரிசோதனை செய்வதுடன் தடுப்பூசியும் அங்கேயே செலுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 250 முகாம்கள் நடைபெற்று வருகிறது.
முழு ஊரடங்கையொட்டி இன்று பால் விற்பனை, பத்திரிகை விற்பனை மற்றும் சில அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தங்களது வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் குமரகுருபரன், உதவி கமிஷனர்கள் சேகர், பிரேம்குமார், சண்முகம், சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன். மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்திரவேல், நவீன்பாண்டியன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story