கல்வி கட்டணம் அனைத்து வகுப்புகளுக்கும் வரையறுக்கப்பட வேண்டும்
வரும் கல்வியாண்டிற்கு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் கல்வி கட்டணத்தை வரையறுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
விருதுநகர்,
வரும் கல்வியாண்டிற்கு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் கல்வி கட்டணத்தை வரையறுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
மாணவர் சேர்க்கை
நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் நடப்பு கல்வியாண்டு முடிவடையும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஆனால் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு முடிவதற்குள் அடுத்த கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்கிவிட்டனர். அதிலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலுடன் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலித்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளில் அதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலை உள்ளது.
கல்விக்கட்டணம்
சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தும் நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் கொரோனா பாதிப்பால் திறக்கப்படாத நிலையிலும்கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை பல வழிகாட்டல்களை வழங்கினாலும் நீதிமன்றம் தலையிட்டு கல்வி கட்டணத்திற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்தது.
வளர்ச்சி பணி
அதிலும் பல பள்ளிகள் ஐகோர்ட்டு வழிகாட்டலையும் மீறி கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்பட்டது தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பள்ளிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வரும் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்து வரும் நிலையில் பல விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாமலேயே கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி வளர்ச்சிப்பணிகளுக்காக தொகை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வழிகாட்டுதல்
எனவே பள்ளி கல்வித்துறை மாணவர் சேர்க்கை குறித்தும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் குறித்தும் உரிய வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டலின் படியே தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன் அதனை மீறி வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story