நடுக்கடலில் படகு கவிழ்ந்தது; குமரி மீனவர்கள் 11 பேர் கதி என்ன?


நடுக்கடலில் படகு கவிழ்ந்தது; குமரி மீனவர்கள் 11 பேர் கதி என்ன?
x
தினத்தந்தி 25 April 2021 1:31 AM IST (Updated: 25 April 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த குமரி மீனவர்கள் 11 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கர்நாடகம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த குமரி மீனவர்கள் 11 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நடுக்கடலில் படகு கவிழ்ந்தது
கர்நாடக மாநிலம் கார்வார் தெற்கு கடல் பகுதிக்கும், கோவா கடல் பகுதிக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் நேற்று பகல் 12.30 மணி அளவில் வள்ளவிளை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பெரியநாயகி என்ற விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது நடுக்கடலில் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்ததுடன் இரண்டாக உடைந்தும் கிடந்தது. அந்த படகை மீனவர்கள் பார்வையிட்டனர். அப்போது அது மெர்சிடஸ் என்ற பெயருடையது என்பது தெரிய வந்தது.
குமரி மீனவர்கள்
அதுகுறித்து மீனவர்கள் விசாரித்தனர். அப்போது, அது குமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்த கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் அந்த விசைப்படகில் கடந்த 9-ந்தேதி ஜோசப் பிராங்கிளின் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றார்.
அவருடன் வள்ளவிளையை சேர்ந்த பிரெடி, ஏசதாசன், ஜான், சுரேஷ், ஜெபிஷ், விஜீஷ், ஜெனிஸ்டன், ஜெகன், ஷெட்ரிக், மால்வின் ஆகிய 10 மீனவர்களும் சென்றது தெரிய வந்தது. படகு மட்டும் உடைந்து கிடந்துள்ளது. ஆனால் மீனவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
கதி என்ன?
இதுபற்றி வள்ளவிளை மீனவ கிராமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மீனவ மக்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீனவர்கள் என்ன ஆனார்களோ? என்ற கவலையில் உள்ளனர். அவர்களை விரைந்து தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜெஸ்டின் ஆன்டணி ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில், வள்ளவிளையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர், கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடித்த போது படகு கவிழ்ந்து மாயமாகி உள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story