கைதி கொலைக்கு நீதி கேட்டு வாகைக்குளத்தில் கிராமமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
கைதி கொலைக்கு நீதி கேட்டு வாகைக்குளம் கிராமத்தில் திரண்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகன் முத்து மனோ (வயது 27). இவர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர். கடந்த 22-ந் தேதி நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோவை போலீசார் அடைத்தனர். அப்போது கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் முத்து மனோ அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அன்று இரவு முத்து மனோவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறையை முற்றுகையிட்டனர். இதற்கிடையே, முத்து மனோவின் தந்தை பாபநாசத்தின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் முத்து மனோ சாவுக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த கிராம மக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தெற்கு மூன்றடைப்பில் ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, நதிநீர் இணைப்பு தாசில்தார் நல்லையா, நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு லிசா ஸ்டெபலா தெரஸ் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனா கட்டுப்பாடு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் அமைதியாக கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர். இதை ஏற்க மறுத்த கிராம மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு கலவர தடுப்பு போலீசார் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து முத்து மனோவின் சொந்த ஊரான வாகைக்குளத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள மைதானம் ஒன்றில் பந்தல் அமைத்து கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமத்தினர் என ஏராளமானோர் திரண்டு முத்து மனோவின் சாவுக்கு நீதி கேட்டும், சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முத்து மனோவின் தந்தை பாபநாசம் கூறுகையில், 'எனது மகனின் இறப்புக்கு காரணமான சம்பந்தப்பட்ட அனைத்து சிறை அதிகாரிகள், காவலர்கள், நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போலீசார் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.
இந்த போராட்டத்தில் பருத்திக்கோட்டை நாட்டார் கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் முருகையா, தமிழர் விடுதலைக்களம் தலைவர் ராஜ்குமார், மக்கள் மறுமலர்ச்சி கழகம் பொன் முருகேசன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பார்வதி சண்முகசாமி, மாவட்ட செயலாளர் வண்ணை முருகன், கருஞ்சிறுத்தைகள் அமைப்பு இயக்க தலைவர் அதிசய பாண்டியன், தேவேந்திரர் சட்ட பாதுகாப்பு அமைப்பு தலைவர் மதுரம் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் போராட்டம் நிறுத்தப்படுவதுடன் நாளை (திங்கட்கிழமை) தொடர்ந்து போராட்டம் நடக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
---
Related Tags :
Next Story