இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் கொரோனாவுக்கு பலி
இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் கொரோனாவுக்கு பலியானார்.
சிக்கமகளூரு:
இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக விளங்கி வருபவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கடூர் ஆகும். வேதா கிருஷ்ணமூர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் செலுவாம்பா(வயது 67). வேதா கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு அக்காவும், தம்பியும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார்.
தற்போது அவர் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் செலுவாம்பா, உடல்நலக்குறைவால் அவதி அடைந்தார். இதையடுத்து அவரை வேதா கிருஷ்ணமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சைக்காக கடூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொரோனாவுக்கு பலி
அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கை டாக்டர்களுக்கு கிடைத்தது. இதில் செலுவாம்பாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தங்களிடம் ஒப்படைத்துவிடும்படி குடும்பத்தினர் கேட்டனர். ஆனால் சுகாதார துறையினர் செலுவாம்பாவின் உடலை குடும்பத்தினர் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.
உடல் அடக்கம்
செலுவாம்பா, கொரோனாவால் உயிரிழந்து இருப்பதால் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். மேலும் தாங்கள் சொல்லும் இடத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பாதுகாப்பாக சுகாதார துறையினரே செலுவாம்பாவின் உடலை அடக்கம் செய்வார்கள் என்று தெரிவித்தனர்.
அதன்பேரில் கடூர் தாலுகா பீரூர் சாலையில் உள்ள வேதா கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான நிலத்தில் செலுவாம்பாவின் உடல் புதைக்கப்பட்டது. சுகாதார துறையினர் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செலுவாம்பாவின் உடலை அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story