கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பொதுநல மனுக்கள் தாக்கல்
பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் அந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கண்டனம்
அப்போது பெங்களூரு மாநகராட்சி தலைமை சுகாதாரத்துறை அதிகாரி சார்பில் ஐகோர்ட்டில், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்கள் குறித்தும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையை ஏற்க தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா மறுத்து விட்டார்.
வென்டிலேட்டர் வசதியுடன் உள்ள ஐ.சி.யூ. படுக்கைகளில் 11 மட்டுமே காலியாக உள்ளன. 406 படுக்கைகளை கொண்ட ஐ.சி.யூ. படுக்கைகளில் 10 மட்டுமே காலியாக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது. இதன் காரணமாக மாநகராட்சியின் அறிக்கைக்கு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
படுக்கையை உடனடியாக அதிகரிக்க...
மேலும் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதால், உடனடியாக மருத்துவமனைகளில் படுக்கைகளின் வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சியும், அரசும் உடனடியாக எடுக்க வேண்டும். பெங்களூருவில் படுக்கைகளின் தேவை அதிகமாக இருப்பதால், பெங்களூரு அருகே உள்ள மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கைகளை அடையாளம் கண்டு, அங்கு நோயாளிகள் உரிய சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.எஸ். ஓகா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், நிலைமையை உணர்ந்து மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரித்து நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 27-ந் தேதி ஒத்திவைத்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story