கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்; கர்நாடகத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்


கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்; கர்நாடகத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்
x
தினத்தந்தி 25 April 2021 2:18 AM IST (Updated: 25 April 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கர்நாடகத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெங்களூரு:

முழு ஊரடங்கு அமல்

  பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. அதைத்தொடர்ந்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தி அரசு உத்தரவிட்டு இருந்தது.

  ஏற்கனவே திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை என மாற்றப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கர்நாடகத்தில் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியில் இருந்தே அமலுக்கு வந்தது. நேற்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது.

கடைகள் அடைப்பு

  இதனால் நேற்று காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் காய்கறி, மளிகை கடைகள், பால், பேக்கரி கடைகள், பழக்கடைகள், இறைச்சி கடைகள், மார்க்கெட்டுகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக காலையிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

  காலை 10 மணிக்கு பின்பு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திறந்திருந்த கடைகளையும் போலீசார் உடனடியாக மூடும்படி உத்தரவிட்டனர். இதனால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். அதையும் மீறி திறந்திருந்த கடைகளை போலீசாரே அடைக்க செய்தார்கள். இதன் காரணமாக போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் உண்டானது. என்றாலும், காலை 10 மணிக்கு பின்பு மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

மக்கள் ஒத்துழைப்பு

  மாநிலம் முழுவதும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அரசு அலுவலகங்களும் திறந்திருந்தது. துமகூரு, பெங்களூரு புறநகர், பெலகாவி, உப்பள்ளி, சிக்கமகளூரு, மைசூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முழு ஊரடங்குக்கு மக்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். கர்நாடகத்தில் நேற்று குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

  பெங்களூருவிலும் குறைந்த அளவே பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்காக இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் நிலையங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெங்களூருவில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஓடின.

பெங்களூரு சாலைகள்...

  பெங்களூருவில் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருந்தது. பெங்களூருவில் ஊரடங்கையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள். நகர் முழுவதும் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. சாலைகள் அனைத்தும் இரும்பு தடுப்பு வேலிகளால் அடைக்கப்பட்டு இருந்தது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு சாலைகள் நேற்று வாகனங்கள் இன்றியும், மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.

  பெங்களூருவில் 150 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள். அதுபோல், காலை 10 மணிக்கு பின்பு தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் இருந்து கார், இருசக்கர வாகனங்கள் என 1,149 மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்கள் வீட்டுக்குள் முடக்கம்

  அதுபோல், பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணிக்கு பின்பு வெளியே சுற்றி திரிந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல பகுதிகளில் போலீசாருடன், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  கலபுரகி உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். இதன் காரணமாக கர்நாடகத்தில் நேற்று முழு ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

இன்றும் ஊரடங்கு

  கர்நாடகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு சில பகுதிகளில் மக்கள் ஊரடங்கை மீறி இருந்தார்கள். இதனால் இன்று மாநிலம் முழுவதும் ஊரடங்கை மக்கள் மீறுவதை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

  இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story