தென்காசியில் கொரோனா பரவலை தடுக்க 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள்
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, ஊரக வளர்ச்சி திட்ட முகமை மாவட்ட அலுவலர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட அளவில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறை அலுவலர்களை கொண்டு 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவட்டங்களில் பொது சுகாதாரம், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு மற்றும் தூய்மை பணிகள் தொடர்பான பணிகளை கண்காணித்து அதுதொடர்பான விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
குறுவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறுவட்டத்தில் உள்ள பொதுக்கட்டிடங்கள் மற்றும் பொதுப்பயன்பாட்டிற்கான இடங்களை கண்டறிந்து பிற துறை அலுவலர்களுடன் இணைந்து தினமும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணியை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறு வட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர புதிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா? என்பதை கண்காணித்தும், மேற்படி நிகழ்சிகளில் குறிப்பிட்ட அளவில் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை கள அலுவலர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய துணை காவல் ஆய்வாளர் நிலைக்கு குறையாத ஒரு அலுவலர் ஆகியோர்களை கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் பிறமாநிலத்தில் இருந்து தற்போது சொந்த ஊர் திரும்பியவர்கள், வெளிநாடுகளில் வேலைக்கு சென்று திரும்பியவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து சுகாதார துறையினர் மூலம் உடனடியாக அவர்களின் உடல் நிலை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்திடவும் தொடர்ந்து கண்காணித்திடவும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சமீரன் பார்வையிட்டு அங்குள்ள அலுவலர்களிடம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story