இன்று முழு ஊரடங்கு: சேலத்தில் காய்கறி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
சேலம்:
இன்று முழு ஊரடங்கு காரணமாக சேலத்தில் உள்ள பெரும்பாலான காய்கறி மற்றும் மீன் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இறைச்சி, மீன், தினசரி காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவை முற்றிலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பெரும்பாலான காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் நேற்று மக்களின் கூட்டம் அலைமோதியது.
சேலத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் பெரும்பாலான மக்கள் அசைவம் சமைத்து குடும்பத்தினருடன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இன்று முழு ஊரடங்கு காரணமாக இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் சிலர் நேற்றே தங்களுக்கு தேவையான இறைச்சி மற்றும் மீன்களை வாங்கி வீடுகளில் சமைத்து குடும்பத்தினருடன் சாப்பிட்டனர். இதேபோல் காய்கறிகளையும் வாங்கிச்சென்றனர்.
கூடுதல் விற்பனை
இதனால் அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, பழைய பஸ் நிலையம், சூரமங்கலம், அம்மாபேட்டை, குகை, தாதகாப்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட கூடுதல் விற்பனை நடைபெற்றது.
பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கி சென்றதை காணமுடிந்தது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரைக்கும், பிராய்லர் கோழி ரூ.180 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
மீன் விற்பனை
சேலம் பழைய பஸ்நிலையம், சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் நேற்று காலை மீன்களை வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல் சேலம் சின்னக்கடைவீதி, திருமணிமுத்தாறு கரையோரம், பழைய பஸ்நிலையம் அருகில், உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவல் காரணமாக பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வகைகளை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story