அறுவை சிகிச்சை செய்ய தாமதம் செய்வதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதி தர்ணா போராட்டம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதி தர்ணா போராட்டம்
சேலம்:
அறுவை சிகிச்சை செய்ய தாமதம் செய்வதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், கருணை கொலை செய்யுமாறு போலீசாரிடம் கதறியதால் பரபரப்பு நிலவியது.
கைதி தர்ணா
சேலம் மத்திய சிறையில் தண்டணை மற்றும் விசாரணை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை வாரந்தோறும் சனிக்கிழமையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட கைதிகளை சிறைக்காவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, ஒரு கைதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தின் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், தன்னை கருணை கொலை செய்யுங்கள், என்னால் முடியவில்லை என்று கண்ணீர் மல்க கதறினார். இந்த தகவலை அறிந்து வந்த ஆஸ்பத்திரி போலீசார் அந்த கைதியை சமாதானம் செய்ய முயன்றனர்.
அறுவை சிகிச்சை
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் தோரப்பாடியை சேர்ந்த கணபதி (வயது 34), என்பதும், கடந்த 2019-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் சங்ககிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீர் பாதையில் கணபதிக்கு பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதையடுத்து இந்தாண்டு அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
கால தாமதம்
இதற்கிடையில், தற்போதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வலியால் அவதிப்பட்டு வந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் சிறைத்துறை நிர்வாகம் கால தாமதம் செய்து வந்ததாகவும், இதனால் கைதி கணபதி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் சமாதானம் செய்து மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story