உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக ‘வாட்ஸ்-அப்’பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; வாலிபர் மீது வழக்கு
உயிருடன் இருக்கும்போதே தான் இறந்ததாக ‘வாட்ஸ்-அப்’பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவேங்கடம், ஏப்.25-
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் தனது செல்போனில் ‘வாட்ஸ்-அப்’பில் தினமும் விதவிதமாக ஸ்டேட்டஸ் வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இவர் மாரடைப்பால் இறந்ததாக, அவரது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் கண்ணீர் அஞ்சலி படம் வைக்கப்பட்டு இருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபரின் உறவினர்கள், நண்பர்கள் உடனே அவரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் கூறுகையில், தினமும் ‘வாட்ஸ்-அப்’பில் பல்வேறு வகையான ஸ்டேட்டஸ் வைத்து அலுத்து விட்டது. எனவே, மாறுதலுக்காக உயிருடன் இருக்கும்போதே நான் மாரடைப்பால் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி படத்தை ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் வைத்தேன் என்று அலட்சியமாக கூறினார்.
இதனால் அந்த வாலிபரை உறவினர்கள், நண்பர்கள் கண்டித்தனர். இதுதொடர்பாக அந்த வாலிபரிடம் திருவேங்கடம் போலீசாரும் விசாரித்து அறிவுரை வழங்கினர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story