பெரம்பலூரில் காய்கறிகள் வாங்க அலைமோதிய மக்கள்


பெரம்பலூரில் காய்கறிகள் வாங்க அலைமோதிய மக்கள்
x
தினத்தந்தி 25 April 2021 3:48 AM IST (Updated: 25 April 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி நேற்று பெரம்பலூரில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்:

இன்று முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு கடந்த 20-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இன்று டீக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
காய்கறிகள் வாங்க...
மேலும் இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் நாளை சித்ரா பவுர்ணமி என்பதால் பெரம்பலூரில் நேற்று உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், சாலையோர காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று காலை முதலே அலைமோதியது. ஆனால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றவில்லை.
நேற்று சனி பிரதோஷம் என்பதாலும், இறைச்சி, மீன்களை வாங்கி வைத்தால் கெட்டுப்போய்விடும் என்பதாலும் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
பஸ்களில் பயணிகள் கூட்டம்
நேற்று இரவு 10 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாததால், பகல் நேரத்தில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. முழு ஊரடங்கு அன்று டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என்பதால், நேற்று டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை உற்சாகத்துடன் வாங்கிச்சென்றனர்.

Next Story