முழு ஊரடங்கான இன்று சென்னையில் காய்கறி கடைகள் திறக்கலாம் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி


முழு ஊரடங்கான இன்று சென்னையில் காய்கறி கடைகள் திறக்கலாம் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி
x
தினத்தந்தி 25 April 2021 7:57 AM IST (Updated: 25 April 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கான இன்று சென்னையில் காய்கறி கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கலாம் என்று போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் முழு ஊரடங்கின்போது, காய்கறி கடைகள் இயங்கலாம் என்று போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24-ந்தேதி (நேற்று) இரவு 10 மணி முதல் 26-ந்தேதி (நாளை) அதிகாலை 4 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவ தேவைகளுக்கும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பணிகளுக்காக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. காய்கறி கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

திருமணத்திற்கு 100 பேர்கள் மிகாமலும் இறுதிச் சடங்கிற்கு 50 பேர்கள் மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330, 044-23452362 எனும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 18-ந்தேதி வெளியிட்ட ஊரடங்கு குறித்த தமிழ் செய்திக்குறிப்பில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை காய்கறி கடைகளை திறக்கக்கூடாது என்றும், ஆங்கில செய்திக்குறிப்பில் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது போலீசார் ஆங்கில செய்திக்குறிப்பை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story