இன்று முழு ஊரடங்கு: இறைச்சியை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்த மக்கள்
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி மீன்மார்க்கெட்டுகள் மற்றும் மளிகை கடைகளில் நேற்று மக்கள் திரண்டனர். இறைச்சி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் கடந்த 20-ந்தேதி முதல் (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரவு வேளைகளில் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தேவையில்லாமல் யாரும் நடமாடாதவாறு பார்த்துகொள்கிறார்கள். அதேபோல மறுஅறிவிப்பு வரும்வரை கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளன.
அதேவேளை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும், தமிழக அரசு கடந்த 18-ந்தேதி அறிவித்தது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு அப்போது அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கு என்பதால் மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், ஆவின் பாலகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். ஓட்டல்களிலும் இன்று ‘பார்சல்’ சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதி கிடையாது. இதுபோல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கின்போது கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள பொதுமக்கள் நேற்று ஆர்வம் காட்டினர்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். அந்தவகையில் இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் நேற்று மக்கள் கூடினர். சென்னையில் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை, திருவான்மியூர், பெரம்பூர், நடுக்குப்பம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட மீன்மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
அதேபோல இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சிக்கன், மட்டன், காடை என விரும்பிய இறைச்சியை முன்கூட்டியே மக்கள் வாங்கி வைத்துக்கொண்டனர். காய்கறி-மளிகை கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. தேவையான மளிகை பொருட்களையும் மக்கள் வாங்கிக்கொண்டனர். அந்தவகையில் முழு ஊரடங்கையும் எதிர்கொள்ளவும், தேவையான பொருட்கள் வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவும் பொதுமக்கள் நேற்று ஆர்வம் காட்டினர்.
Related Tags :
Next Story