மருந்து பற்றாக்குறையால் 3 லட்சம் பேருக்கு மட்டும் தடுப்பூசி மந்திரி ராஜேஷ் தோபே கவலை
தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திறன் இருந்தாலும் மருந்து பற்றாக்குறை காரணமாக 3 லட்சம் பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கவலை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டிய மாநிலம் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தினம்தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், ஆக்சிஜன், தடுப்பூசி, சிகிச்சை மருந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கொரோானா தொற்றல் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து முக்கிய மாநிலங்களும் ஒரே நாடு ஒரே விலை என்ற வகையில், தடுப்பூசிக்கு ஒரே விதமாக சீரான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசிடம் இதுகுறித்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
விலை குறைக்கப்பட்டால் நாங்கள் அதிகமான தடுப்பூசிகளை வாங்க முடியும்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளும். மற்றவர்களுக்கு கார்ப்பரேட்டு நிறுவனங்கள் தங்களாக முன்வந்து வழங்க வேண்டும்.
கோவிஷீல்டு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்திடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக மே 24-ந் தேதி வரை உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை மத்திய அரசு ஏற்கனவே பதிவு செய்துவிட்டது. எனவே மே 24-ந் தேதிக்கு பிறகுதான் தடுப்பூசி வழங்க முடியும் என கூறிவிட்டது. நாங்கள் கோவாக்சின் மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் உடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
மராட்டியத்தில் 4 ஆயிரம் தடுப்பூசி மையங்களும் போதுமான பயிற்சிபெற்ற மனித ஆற்றலும் உள்ளது. ஆனால் தடுப்பூசி வினியோகம், பற்றாக்குறையால் பிரச்சினை நிலவுகிறது.
தினசரி 8 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். ஆனால் தற்போது 3 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story