விபத்தில் காயமடைந்த புதுமாப்பிள்ளைக்கு தவறான சிகிச்சை? ஜிப்மர் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை-பரபரப்பு


விபத்தில் காயமடைந்த புதுமாப்பிள்ளைக்கு தவறான சிகிச்சை? ஜிப்மர் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை-பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2021 11:29 AM IST (Updated: 25 April 2021 11:29 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயமடைந்த புதுமாப்பிள்ளைக்கு தவறான சிகிச்சை அளித்தாக கூறி ஜிப்மர் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தை சேர்ந்தவர் தினே‌‌ஷ் (வயது27). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் புது மாப்பிள்ளையான தினேஷ் தினமும் தைலாபுரத்தில் இருந்து புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 20-ந் தேதி தினே‌‌ஷ் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வானூர் இரும்பை கிராமம் அருகே எதிரே வந்த சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலை தடுமாறி தினே‌‌ஷ் கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கால் முறிந்தது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே தினேசுக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி தினேசுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து மற்றொரு காலிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தினேசை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தினேசின் உறவினர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரியை நேற்று இரவு முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story