திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
தகர தடுப்புகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தொற்றால் ஒரே நாளில் 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக கொரோனா கேர் சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தகர தடுப்புகள் அமைக்கப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நகரமே வெறிச்சோடின
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பஸ்கள், கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் ஓடவில்லை. திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் மற்றும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ஊரடங்கால் சிறு வணிக கடைகள் முதல் அனைத்து வணிக நிறுவனங்களும், சினிமா தியேட்டர்கள், காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தன. முழு ஊரடங்கால் திருவண்ணாமலை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
பேரி கார்டுகள்
தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து வீட்டில் இருக்குமாறு அனுப்பினர். மருந்துக்கடைகள், ஆவின் பாலகம் ஆகியவைகள் மட்டும் திறந்து இருந்தன.
திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று சுப முகூர்த்த தினம் என்பதால் சில திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடந்தன. அதில் குறைந்த அளவிலான நபர்களே கலந்து கொண்டனர்.
இயல்பு வாழக்கை பாதிப்பு
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலில் பக்தர்கள் உள்ளே வரும் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுர வாசல்கள் மூடப்பட்டு இருந்தன.
ஆனால் கோவிலில் சாமிக்கும், அம்மனுக்கும் வழக்கமாக நடைபெறும் அனைத்துப் பூஜைகளும் நடந்தன. கோவிலை சுற்றி உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
-----
Related Tags :
Next Story