வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கையொட்டி உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் திறக்கப்படவில்லை.
உடுமலை
முழு ஊரடங்கையொட்டி உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் திறக்கப்படவில்லை.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கு காரணமாக உடுமலையில் நேற்று பஸ்கள் ஓடவில்லை. உடுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மொத்தம் 94 உள்ளன. இதில் 36 பஸ்கள் வெளியூருக்கு இயக்கப்படும். 58 பஸ்கள் டவுன் பஸ்கள் ஆகும். இந்த பஸ்கள் அனைத்தும இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. ஆங்காங்குள்ள மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனங்கள் ஓடாததால் பொள்ளாச்சி-உடுமலைபழனி தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் சாலை தாராபுரம் சாலை தளி சாலை கொழுமம் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன.
சந்தை
உடுமலை ராஜேந்திரா சாலையில் வாழைத்தார் கடைகள் மளிகை கடைகள் உள்ளன. அத்துடன்ஆட்டிறைச்சி கடைகள் கோழிக்கடைகள் மீன்கடைகள் ஆகியவை அதிகம் உள்ளன. இறைச்சிக்கடைகளில் நேற்று முன்தினம் இரவு இறைச்சி விற்பனை அமோகமாக இருந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த வீதியில் உள்ள நகராட்சி வாரச்சந்தையின் ஒரு பகுதியில் இயங்கும் தினசரி காய்கறி சந்தை மற்றும் காய்கறி கமிஷன் மண்டி ஆகியவை அடைக்கப்பட்டு இந்த வளாகத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. அதனால், எப்போதும் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் ராஜேந்திரா சாலை வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்குக்காக உழவர்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அந்த பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
அம்மா உணவகம்
உடுமலை கல்பனா சாலையில் உள்ள அம்மா உணவகம் நேற்று வழக்கம்போல் திறந்திருந்தது. காலை சிற்றுண்டி மற்றும் மதியம் உணவு ஆகியவை வழக்கம் போல் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கூட்டம் மிகக்குறைவாக இருந்தது.உடுமலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மத்திய பஸ்நிலையம் பழைய பஸ் நிலையம் பொள்ளாச்சி சாலைதிருப்பூர்சாலை சந்திப்பு, தளிசாலை-பொள்ளாச்சி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்பகுதி ரெயில் நிலையம்பகுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
கிறிஸ்தவ ஆலயங்கள்
கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆராதனை கூட்டம் நடைபெறும். கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி கூட்டம் நடைபெறும். முழு ஊரடங்கையொட்டி உடுமலையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டிருந்தன.
உடுமலை தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆராதனை கூட்டத்தை நடத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆலயத்தை சேர்ந்தவர்களில், உடுமலையில் ரெயில்வே தண்டவாளத்திற்கு தெற்குபகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் ரெயில்வே தண்டவாளத்திற்கு வடக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 7மணி வரையிலும் ஆராதனை கூட்டம் நடத்தப்பட்டன.
அதேபோன்று உடுமலை பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்திலும் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் ஆராதனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அருள்நிறை அற்புத அன்னை ஆலயத்திலும் மாற்று ஏற்பாடாக சனிக்கிழமை திருப்பலி கூட்டம் நடந்தது.
இந்து கோவில்கள்
உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அர்ச்சகர்கள் பூஜைகளை நடத்தினர். முழு ஊரடங்கினால் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.
மடத்துக்குளம்குடிமங்கலம்
மடத்துக்குளம் பகுதிகளில் நேற்று முழுநேர ஊரடங்கு காரணமாக அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குடிமங்கலத்தில் பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக நெடுஞ்சாலை வெறிச்சோடி கிடந்தது. பெதப்பம்பட்டியில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அருகே சாலையில் கானல் நீர காணப்பட்டது. அலை அலையாய் காணப்படும் இந்த கானல் நீரைப் போல கொரோனா அலையின் பரவல் விரைவில் காணாமல் போக வேண்டும் என்பது மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
Related Tags :
Next Story