நீலகிரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின


நீலகிரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 25 April 2021 7:45 PM IST (Updated: 25 April 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. மேலும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஊட்டியில் மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்து இருந்தன. 

பொதுமக்கள் அவசிய தேவையான பால், மருந்து, மாத்திரைகளை வாங்க மட்டும் வெளியே வந்தனர். உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புறம் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன.

மார்க்கெட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.

ஊட்டியில் பரபரப்பாக காணப்படும் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய நிலையில் காட்சி அளித்தது. மேலும் ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ஊட்டி மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடியது.

முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லைகளில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கநல்லா உள்ளிட்ட 16 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அங்கு சரக்கு வாகனங்கள், அவசிய தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. நீலகிரியில் ஊட்டி சேரிங்கிராஸ், ராஜீவ்காந்தி ரவுண்டானா, பிங்கர்போஸ்ட் உள்பட 27 இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேவை இல்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றியவர்கள் மற்றும் நடமாடியவர்களை எச்சரித்து அனுப்பினர். ஊட்டியில் 2 அம்மா உணவகங்கள் வழக்கம் போல் திறந்து இருந்தது. மேலும் தேவாலயங்கள், கோவில்கள் மூடப்பட்டன.

கோத்தகிரியில் மருந்து கடைகள் மற்றும் பால் பூத்துக்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ஒரு சில வாகனங்கள் இயக்கப்பட்டன. அந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, தன்னார்வ அமைப்பினர் சிலர் இலவசமாக சிற்றுண்டி வழங்கினர். அரசு பஸ்கள் அனைத்தும் பஸ்நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார், சுகாதாரத்துறையினர் மற்றும் ஊர்க்காவல்படையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய இடங்களில் போலீசார் நின்று, தேவை இல்லாமல் வெளியே சுற்றியவர்களை எச்சரித்து விரட்டினர்.

மேலும் வழக்கம்போல மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பால் விற்பனை மையங்கள் மட்டும் செயல்பட்டது. இருப்பினும் விற்பனை சரிவர நடைபெறாததால் மதியத்துக்கு பிறகு மருந்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதேபோன்று மசினகுடி, நடுவட்டம், டி.ஆர். பஜார். பைக்காரா பகுதியிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.


Next Story