20 பயணிகளுடன் இயக்கப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்


20 பயணிகளுடன் இயக்கப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்
x
தினத்தந்தி 25 April 2021 8:53 PM IST (Updated: 25 April 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் இருந்து உடுமலை வழியாக மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

உடுமலை
திருவனந்தபுரத்தில் இருந்து உடுமலை வழியாக மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். 
ரெயில்கள் இயக்கம்
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி உடுமலை திண்டுக்கல் கரூர் சேலம் காட்பாடி வழியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கும் அங்கிருந்து எதிர்திசையில் இதே வழித்தடத்தில் பாலக்காட்டிற்கும் ரெயிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் பாலக்காடு பொள்ளாச்சி உடுமலை வழியாக மதுரைக்கும் அங்கிருந்து எதிர்திசையில் இதே வழித்தடத்தில் திருவனந்தபுரத்திற்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை தொடர்ந்து உடுமலை வழித்தடத்தில் இயக்கப்பட்டுவந்த ரெயில்கள்  கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் இறுதிமுதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
பின்னர் கொரோனா வைரஸ் தாக்குதலின் வேகம் குறையத்தொடங்கியதால் 8 மாதங்களுக்குப்பிறகு, உடுமலை வழித்தடத்தில் பாலக்காடுசென்னைபாலக்காடு இடையேயான ரெயில், சிறப்பு ரெயிலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று உடுமலை வழித்தடத்தில் திருவனந்தபுரம்மதுரைதிருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டுவந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலும் 9 மாதங்களுக்கு பிறகு சிறப்பு ரெயிலாக கடந்த ஆண்டு 2020 டிசம்பர் மாதம் 23ந்தேதிமுதல் இயக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவு அவசியம்
இந்த ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுவதால், இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருக்கவேண்டும். அதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முன் தினத்திற்குள் முன்பதிவு செய்திருக்க வேண்டும். பயணிகள் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை ரெயிலுக்கு செல்ல பயணம் செய்யும் தினத்தன்று மதியம் 2.45 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலுக்கு பயணம் செய்யும் தினத்தன்று உடுமலையில் இருந்து செல்வதென்றால் மாலை 3.15 மணிவரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
ஆனால் உடுமலை வழித்தடத்தில் வழக்கம்போல் நேற்று ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவுபுறப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை6.30 மணிக்கு வந்து சேர்ந்தது. 22பெட்டிகளுடன் வந்த இந்த ரெயிலில் மொத்தம் 20 பயணிகள் மட்டுமே இருந்தனர். சில பெட்டிகளில் ஒருபயணிகூட இல்லை.அத்துடன் இந்த ரெயிலில் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ஒருபயணிகூட ஏறவில்லை. கேரளாவிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டமில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை ரெயில்
அதேபோன்று சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.05 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.இந்த ரெயிலிலும் பயணிகள் குறைவாகவே இருந்தனர்.இந்த ரெயிலில் வந்த பயணிகளில் 20பேர் உடுமலை ரெயில் நிலையத்தில் இறங்கினர். அதேசமயம் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயிலில் செல்வதற்கு ஒரு பயணிகூட ஏறவில்லை.
உடுமலை ரெயில் நிலையத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டும் செய்யப்படுகின்றன. அப்போதைக்கு ரெயில்களில் செல்வதற்கு முன்பு போன்று உடனடியாக டிக்கெட்எடுத்துக்கொண்டு ரெயிலில் செல்ல இயலாது. இந்த நிலையில் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யுமிடம் வழக்கம்போல் திறக்கப்பட்டு செயல்பட்டது.
 பயணிகள் கூட்டம்
பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 5.08மணிக்கு வந்து சேர்ந்தது. உடுமலையில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்ல உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகள் புறப்பட்டனர். இதில் 6 பேர் நேற்று காலை உடுமலை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள். மற்றவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களாகும். இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு வந்தபோது அதில் ஓரளவு பயணிகள் இருந்தனர்.
இதேபோன்று மதுரையில் இருந்து நேற்று மாலை திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் இருந்து 10 பயணிகள் உடுமலை ரெயில் நிலையத்தில் இறங்கினர். உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட இந்த ரெயிலில் ஒன்றிரண்டு பயணிகள் மட்டுமே புறப்பட்டு சென்றனர். இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
------------------------





Next Story