ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி, காயல்பட்டினம், பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்ப்பிணி பெண்ணும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆறுமுகநேரியில்
கொரோனா பரவல்
ஆறுமுகநேரியில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது நேற்று முன்தினம் முதல் கெரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஆறுமுகநேரியில் போலீஸ் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவருக்கும், ஆறுமுகநேரி பெரியான்விளையில் ஏற்கனவே ஒரே வீட்டில் 3 பேருக்கு இருந்த நிலையில், அதே வீட்டில் 48 வயது மற்றும் 24 வயது பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தெற்கு சுப்பிரமணியபுரத்தில் 70 வயது முதியவர், அவரது 48 வயது மகனுக்கும், 11 வயது பேத்திக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல ஆறுமுகநேரியில் ஒருவருக்கும் ,நல்லூர்முத்து மாவிலையில் 52 வயது விவசாயிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண் பாதிப்பு
இந்நிலையில் நேற்று குரங்கன்தட்டுப் பகுதியில் சென்னையிலிருந்து வந்த மகன், மற்றும் தாய்க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜெயின்நகரில் மேலும் ஒரு பெண்ணுக்கும், வாளவிலை வடக்கு தெருவில் 27 வயது கர்ப்பிணி பெண்ணுக்கும், அதன் அருகே உள்ள நாராயணசுவாமி கோவில் அருகில் உள்ள 79 வயது முதியவர், அவரது 74 வயது மனைவி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி கீழ சண்முகபுரம் பகுதியில் இரண்டு பெண்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகமானோர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தில்...
இதேபோல் காயல்பட்டினத்தில் கொரோனா இரண்டாம் சுற்று அலை உருவானதில் இருந்து நேற்று வரை 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 53 பேர்கள் வீடுகளில் சிகிச்சை பெறுகின்றனர். 10 பேர் தனியார், மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 4 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் பரிசோதனை
காயல்பட்டணத்தில் தொற்று பரவியுள்ள இடங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல், காய்ச்சல் பரிசோதனை, ஆகியவைகளை அப்பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர், மற்றும் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள், மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story