கடலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
கடலுர்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இரவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் நகைக்கடைகள் அதிகம் உள்ள லாரன்ஸ் ரோடு, சுப்புராய செட்டித்தெரு, பாத்திர கடைகள் மிகுந்த தேரடி தெரு போன்ற பல்வேறு சாலைகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டு இருந்தன.
முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள மீன் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்தது. இது தவிர இறைச்சி கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. எனினும் நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் தங்களுக்கு தேவைான இறைச்சியை வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் அங்கு கோழி, ஆட்டு இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெறிச்சோடியது
ஆனால் நேற்று முழு ஊரடங்கால் இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதேபோல் ஜவுளிக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் நேற்று சிறிய ஜவுளி கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. செல்போன் கடை, சலூன் மற்றும் அழகு நிலையங்கள், காய்கறி, மளிகைக்கடைகள், அரிசி கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் மருந்து கடைகள், பால் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. அதில் ஒரு சிலர் தங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. எனினும் மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது. பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் அவை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகராட்சி சார்பில் பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தியேட்டர்கள் மூடல்
இது தவிர அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த முழு ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். கொளுத்திய வெயிலில் வீட்டுக்குள் இருக்க முடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் தவிப்புக்குள்ளாகினர்.
ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டதால், ஒரு சில மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பங்கேற்றதையும் பார்க்க முடிந்தது. மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story