முழு ஊரடங்கு எதிரொலி: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
முழு ஊரடங்கு எதிரொலியாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
தர்மபுரி:
முழு ஊரடங்கு எதிரொலியாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 30 மணி நேரம் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையங்கள், சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. சேலம்-கிருஷ்ணகிரி 4 வழி சாலை வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. முக்கிய ஊர்களில் ஆங்காங்கே உள்ள உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அத்தியாவசிய தேவையான மருந்து, பால் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தது.
தர்மபுரி முடங்கியது
முழு ஊரடங்கு காரணமாக தர்மபுரி நகர மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் நகரின் முக்கிய சாலைகளான நான்கு ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, பென்னாகரம் ரோடு, பைபாஸ் ரோடு, கடைவீதி, நாச்சியப்ப கவுண்டர் தெரு, பைபாஸ் ரோடு, கந்தசாமி வாத்தியார் தெரு, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றியும், போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
எச்சரிக்கை
இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.
கிராமப்புறங்களில் காலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது
Related Tags :
Next Story