ரூ20¼ கோடிக்கு மது விற்பனை


ரூ20¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 25 April 2021 5:19 PM GMT (Updated: 25 April 2021 5:19 PM GMT)

முழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.20¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

கோவை

முழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.20¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கையொட்டி மளிகை, காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக   கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் மதுபாட்டில்களை பைகளில் வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது.

இது குறித்து கோவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரூ.20¼ கோடிக்கு மது விற்பனை

கோவை வடக்கில் 158 மதுக்கடைகளும், தெற்கில் 135 கடைகளும் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 293 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டன. 

இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பிரியர்கள் அதிகளவு வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் விற்பனை அதிகமாக இருந்தது. 

கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் சராசரியாக ரூ.7 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும். 

ஆனால்  ஒரே நாளில் கோவை வடக்கில் 158 டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.11 கோடியே 11 லட்சத்து 43 ஆயிரத்து 260-க்கும், கோவை தெற்கு பகுதியில் 135 மதுக்கடைகள் மூலம் ரூ.9 கோடியே 13 லட்சத்து 65 ஆயிரத்து 210-க்கும் மது பாட்டில்கள் விற்பனையானது. 

அந்த வகையில் மொத்தம் ரூ.20 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 470-க்கு மதுபாட்டில்கள் விற்கப்பட்டு உள்ளது.டாஸ்மாக் கடைகளில்  ஒரேநாளில் மட்டும் 27,176 பெட்டி மதுபான வகைகளும், 9,897 பெட்டி பீர்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story