குமரி மாவட்ட மக்களை முழுமையாக முடக்கிய முழு ஊரடங்கு


குமரி மாவட்ட மக்களை முழுமையாக முடக்கிய முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 26 April 2021 1:14 AM IST (Updated: 26 April 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

7 மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால், கடைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் ஓடாததால் குமரி மாவட்டம் வெறிச்சோடியது.

நாகர்கோவில், 
7 மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால்,
கடைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் ஓடாததால் குமரி மாவட்டம் வெறிச்சோடியது.
முழு ஊரடங்கு 
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. எனவே நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முதற்கட்டமாக கடந்த 20-ந் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி 7 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. குமரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவே பஸ்கள் சம்பந்தப்பட்ட பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கடைகள் அடைப்பு 
குமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, கருங்கல், களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, குளச்சல் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகர் புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டு இருந்தன.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் அவ்வை சண்முகம் சாலை, கே.பி. ரோடு, கேப் ரோடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டார் மார்க்கெட் மற்றும் வடசேரி காய்கறி சந்தை ஆகிய இடங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. அதே சமயம் மருந்தகங்கள், ஆவின் பாலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன.
எளிமையாக நடந்த திருமண நிகழ்ச்சி
இதற்கிடையே நேற்று சுப முகூர்த்த தினம் என்பதால் பல்வேறு திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகர்கோவிலிலும் பல மண்டபங்களில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. எனினும் ஒரு சில திருமணங்கள் எளிய முறையில் நடந்தன. அரசின் விதிகளை கடைப்பிடித்து குறைவான நபர்களை கொண்டு திருமண நிகழ்ச்சியை நடத்தினர். அதில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் என்றாலே தடபுடலான அறுசுவை உணவுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் அதிகமான நபர்களை சேர்க்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததால் நேற்று நடைபெற்ற திருமணங்களில் பெரிய அளவில் உணவுகள் தயார் செய்யப்படவில்லை. 
ரெயில் பயணிகள் தவிப்பு 
சென்னையில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பஸ் போக்குவரத்து இல்லாததால் ஏராளமான பொதுமக்கள் ரெயிலில் வந்தனர். ஆனால் ரெயில் நிலையத்தில் இறங்கிய பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல பஸ், ஆட்டோ வசதி இல்லாமல் தவித்தனர். பெரும்பாலானோர் நடந்தே தங்களது ஊர்களுக்கு சென்றதை பார்க்க முடிந்தது. ஒரு சிலரை அவர்களது உறவினர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து அழைத்து சென்றனர்.
சுற்றுலா தலங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அவை வெறிச்சோடி காணப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு 
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்து. அதாவது கன்னியாகுமரி போலீஸ் துணை சரகத்தில் 13 இடங்களில் 76 போலீசாரும், நாகர்கோவில் துணை சரகத்தில் 14 இடங்களில் 80 போலீசாரும், குளச்சல் துணை சரகத்தில் 20 இடங்களில் 114 போலீசாரும், தக்கலை துணை சரகத்தில் 22 இடங்களில் 143 போலீசாரும் என மொத்தம் 69 இடங்களில் 413 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இதுபோக ரோந்து பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டார்கள். முக்கியமாக ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்காவிளை ஆகிய சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டனர். கடலோர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு
மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் நாகர்கோவில் செட்டிகுளம், சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் சந்திப்பு, டெரிக் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தற்காலிக தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த நபர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் குடும்பத்தோடு வந்த சிலரையும் போலீசார் தடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் நெருங்கிய உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருமண அழைப்பிதழை பார்த்த பிறகு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story