முழு ஊரடங்கு அமல்; தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நெல்லையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நெல்லை, ஏப்:
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நெல்லையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் நெல்லை புறநகர் மாவட்டத்தில் மட்டும் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டனர். சாலைகளில் பயணித்த வாகனங்களுக்கு உரிய அனுமதி இருக்கிறதா?, அத்தியாவசிய தேவைக்காக அந்த வாகனங்கள் இயக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
போலீசாரின் பணிகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடிக்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது கொரோனா வைரஸ் 2-வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 24-ந் தேதி சனிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுகிறது.
50 ஆயிரம் வழக்குகள்
நெல்லை மாவட்டம் முழுவதும் எல்லைப்பகுதியில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 17 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சமூக இடைவெளி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் என மொத்தம் 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் சோதனை சாவடியில் இ-பாஸ் நடைமுறை கடுமையாக பின்பற்றப்படும். ஊரடங்கு மீறி வெளியே வருவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கபசுர குடிநீர்
பின்னர் போலீசாருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். கட்டாயம் முக கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், பழங்கள் வழங்கினார்.
அப்போது, நெல்லை ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு அர்ச்சனா, மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் பழைய பேட்டை, தாழையூத்து, டக்கரம்மாள்புரம், கே.டி.சி. நகர், வி.எம். சத்திரம் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர வண்ணார்பேட்டை, டவுன் ஆர்ச் உள்ளிட்ட இடங்களில் போலீசார் இரும்பு தடுப்புகளை கொண்டு ரோட்டை அடைத்து வாகனங்களில் சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story