அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு


அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 9:07 PM GMT (Updated: 25 April 2021 9:07 PM GMT)

அரியலூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

அாியலூர்:

முழு ஊரடங்கு
அரியலூர் மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று அரியலூர் நகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், வாரச்சந்தை, தினசரி காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இறைச்சி, மீன், கோழி வாங்க அருகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் நேற்று மக்கள் நடமாட்டமின்றி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடியது. பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, வெள்ளாளர் தெரு, சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு, செந்துறை ரோடு, அண்ணா நகர் ஆகிய பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. சிறிய ஓட்டல்களில் உணவு பார்சல் வாங்குவதற்கு மக்கள் வந்து சென்றனர். மருத்துவமனைகள் திறந்திருந்தன. பெருமாள் கோவிலில் முன்பே பதிவு செய்திருந்த திருமணங்கள் நடந்தன. அதன்பின் கோவில் நடை சாத்தப்பட்டது.
நகரில் உள்ள 6 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்தன. திருமண மண்டபங்கள், உணவு விடுதிகளில் உள்ள கூட்ட அரங்குகள் மூடப்பட்டிருந்தன. நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகனத்தில் வருபவர்களை சோதனை செய்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஜும்மா பள்ளிவாசல், தூய லூர்து அன்னை ஆலயம், சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள், முருகன் கோவில் ஆகியவையும் மூடப்பட்டிருந்தன. நகரில் ஆட்டோக்கள், வாடகை கார் மற்றும் பஸ்கள் ஓடவில்லை. கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. நகரமே அமைதியாக இருந்தது.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர்
இதேபோல் ஜெயங் கொண்டம் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. போக்கு வரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை பகுதிகளில் கடைவீதியில் உள்ள பால் கடை, மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்கள் எதுவும் செல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் தடுப்புகள் அமைத்து 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். இருப்பினும் கொரோனா தொற்றின் அபாயத்தை உணராமல் அலட்சியமாக ஆங்காங்கே சிலர் போலீசார் இல்லாத மாற்றுப்பாதையில் நடந்தும், இருசக்கர வாகனத்தில் சென்ற வண்ணமும் இருந்தனர். தா.பழூர் மட்டுமின்றி சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களில் கூட அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக கூட்டமாக காணப்படும் இறைச்சிக்கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. காரைக்குறிச்சி, அனைக்குடம், கோடங்குடி, சோழமாதேவி, பொற்பொதிந்தநல்லூர் போன்ற கிராம ஊராட்சிகளில் முழு சுகாதார பணிகள் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட்டுகளில் அவ்வப்போது இளைஞர்கள் வெளியில் சுற்றித்திரிந்தனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பினர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊராட்சி பகுதிகளில் தீவிரமாக சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி, விக்கிரமங்கலம்
மீன்சுருட்டி பகுதியில் முழு ஊரடங்கையொட்டி சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முன்தினம் மாலை காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ேநற்று அந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டுமே நேற்று திறந்திருந்தன.
விக்கிரமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள நாகமங்கலம், முத்துவாஞ்சேரி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் போன்ற முக்கிய ஊர்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். கிராமப்புறங்களாக இருந்தாலும் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தனர்.

Next Story