பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின


பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 25 April 2021 9:07 PM GMT (Updated: 2021-04-26T02:37:12+05:30)

முழு ஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரம்பலூர்:

7 மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஏற்கனவே கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த 7 மாதங்களுக்கு முன்பு வரை தொடர் ஊரடங்கு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பஸ்கள் ஓடவில்லை
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தொடங்கிவிட்டது எனலாம். பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கினால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனியார்-பொது போக்குவரத்து இயங்கவில்லை. அதன் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு காரணமாக நேற்றும் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், ஷேர் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஓடவில்லை.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களான பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு, மூன்று ரோடு, திருமாந்துறை சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு பஸ்கள் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
வெறிச்சோடின
டீக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், மளிகை கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படவில்லை. இதனால் பெரம்பலூர் உழவர் சந்தை, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பெரம்பலூரில் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
குன்னம்
குன்னம் மற்றும் வேப்பூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. மருந்து கடை, பால் விற்பனையகம் ஆகியவற்றை தவிர மளிகை, காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. குன்னம் தாலுகா முழுவதும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story